ஞாயிறு, 6 ஜனவரி, 2013

அது அவன் மொழி



”டைம் ஹோகயெனா, நிகாலோ நிகாலோ” என்ற படியே அலுவலக வண்டிக்குள் தன்னை நாலாவதாகத் திணித்துக் கொண்டான் ஒரு வட இந்தியன். நால்வரில் மூவர் ஆண்களானபடியால் ஓட்டுனருக்கு அருகிலிருக்கும் முன்னிருக்கையை அந்தப் பெண்ணுக்குத் தாரைவார்க்க வேண்டியதாகிவிட்டது.


இண்டிக்காவின் பின்னிருக்கையில் இருந்த மூவரில் எனக்கும் அந்த வட இந்தியனுக்கும் கொஞ்சம் கணத்த சரீரம். எனக்கும் அவனுக்குமிடையே உட்கார்ந்திருந்த சுப்பு அலையஸ் சுப்ரமணிய சிவம் கொஞ்சம் மெலிதாய் இருந்ததனால் சௌகரியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிரமம் இல்லாமல் தொடங்கியது பயணம்.


முன்னிருக்கை அம்மணி, மாதாபூரில் இறங்கிவிடுவாள். வட இந்தியன் எல்.வி. ப்ரசாத் ஐ ஹாஸ்பிடல் என்று சொன்னதாக ஞாபகம். மூண்றாவதாக நான் சைனிக்புரி”, எனக்கடுத்து சுப்பு ஏ.எஸ். ராவ் நகர். ஏறக்குறைய 32 கிலோ மீட்டர் பயணம். வெள்ளிக் கிழமை மாலையாகப்பட்டதால் ஹைதரபாதின் ட்ராஃபிக் இம்சைகளைக் குறித்து அக்கறை செலுத்தாமல் சின்னதாய்த் தொடங்கிய தூறலில் மனம் லயித்தது. இடது தோளில் சுப்பு தூங்கிச் சரிந்ததைக் கூட கவனிக்காமல் ப்ரக்ருதியில் கவனம் ஒன்றியிருந்தது.


சரியாக 25வது நிமிடத்தில் மாதாபூர் காவல் நிலையத்துக்கு அருகில் அவள் இறங்கிக் கொண்டாள். வட இந்தியனிடம் ஆங்கிலத்தில் வேண்டுகோள் வைத்ததில் இறங்கி முன்னிருக்கைக்கு மாறிக் கொண்டான். இரண்டு சிகப்பு விளக்குகளில் நின்று எல்.வி. ப்ரசாத் கண் மருத்துவமணையை சமீபித்த போது இன்னொரு இருபது நிமிடங்கள் கரைந்திருந்தது.


20 கிலோமீட்டர் பயணம் மீதி இருப்பதால் எங்காவது ஒரு தேநீர் குடிக்கலாம் போல் இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை இந்தி படித்திருந்தாலும், இந்தி டீச்சரின் மேல் இருந்த வெறுப்பு இந்தி மீதான வெறுப்பாகத் திரிந்து, அடுத்த 23 வருடங்கள் மொத்தமாக இந்தியைத் தலைமுழுகியிருந்ததால் வாக்கியம் அமைத்துப் பேசுமளவுக்கு அம்மொழியில் புலமை ஏற்படவில்லை. அரைகுறையாகத் தெலுங்கு தெரியும் என்ற போதும் பல ஓட்டுனர்களுக்கு இந்தி மட்டுமே தெரிந்திருந்த காரணத்தால் அதுவும் பயணற்றுப் போய்விடும்.


ஒரு வேடிக்கை என்னவென்றால் “இங்கிருந்து நாலாவது வீடு” என்பதைக் கூட சொல்லத் தெரியாமல் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறுத்தி, இது கிடையாது, இது கிடையாது என்று சொல்லி பல முறை வாகன ஓட்டிகளை வெறுப்பேற்றியிருக்கிறேன். சரி, விட்ட இடத்துக்கே வருவோம். “ச்சாய் ஹோனா” என்றதும் தலையசைத்து “தீக் ஹை சாப்” என்றபடியே வேகம் குறைத்து சாலையின் இடது ஓரத்துக்கு வந்தான்.

ஃப்ளாஸ்குகளில் தேநீர் நிரப்பி மேசை மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடையொன்றின் முன் போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனத்தை இடது பக்கம் அணைத்து நிறுத்திவிட்டு வண்டியிலேயே உட்கார்ந்திருந்தான். சுப்புவை எழுப்பி கூட அழைத்துக் கொண்டு கடையினுள் நுழைந்தேன். முதல் சிப் அருந்திய போது தான் அந்த ஓட்டுனனை அழைக்காதது ஞாபகம் வந்தது. இடது கையால் சைகையில் அருகில் வரும்படி அழைத்தேன். ”ச்சாய்?” என்று கேட்ட போது முதலில் மறுத்தவன் பின்னர் “ச்சாய், நக்கோ சாப், ஏக் ஃபில்டர் கோல்ட் ஃப்ளாக்” என்று கேட்டான். வாங்கித் தந்ததும் தனியாக நின்று புகைத்துவிட்டு வண்டிக்குள் போய்த் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

கடைகாரச் சிறுவனிடம் கணக்கு முடித்துவிட்டு நாங்கள் வண்டியில் ஏறவும் அவன் இஞ்சினுக்கு மீண்டும் உயிர் கொடுத்தான். மழை வலுக்கத் தொடங்கியிருந்ததால் நாலு பக்கமும் கண்ணாடிகளை உயர்த்தியிருந்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை, அப்படி ஒரு தூக்கம்.

ஏதோ கண்ணாடி உடைவது போன்ற சத்தம் கேட்டதில் தூக்கம் கலைந்தது. நாங்கள் இருந்த வண்டியில் தான் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. வண்டியின் வலது புற வைப்பரைப் பிடுங்கி கண்ணாடியை உடைத்துவிட்டு ஒரு நடுத்தர வயது ஆள் ஓட்டுனனை சட்டையைப் பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தான். சற்றொப்ப தேவிடியா மகனே என்பதற்கு ஈடான தெலுங்கு வார்த்தையைக் கொண்டு அந்த ஓட்டுனனை வசைபாடிக் கொண்டிருந்தான்.

அத்தனை பெரிய வசவுக்குக் கூட அவன் ரியாக்ட் ஆகாததிலிருந்து அவன் தெலுங்கில் சுத்த சூனியம் என்பது தெரிந்தது. அவனது கண்களில் தெரிந்த கலவரத்திலிருந்து அவன் இந்த வண்டியின் உரிமையாளன் இல்லை, வெறும் பணியாள் தான் என்பதும் தெளிவாகியது. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையை வாரிச் சுருட்டி பனியனுக்குள் போட்டுக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன். சுப்புவும் என்னைப் போலவே ஐடி கார்டை ஒளித்து வைத்துக் கொண்டான்.

கொஞ்சம் போல ஸ்பிரிட் வாடை அடித்ததில் நடுத்தர வயது ஆசாமி போதையில் இருப்பது புரிந்தது. ”சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை உனது ஓட்டுனன் என் மேல் தெளித்துவிட்டான், மூண்று கிலோமீட்டர் துரத்தி வந்து மடக்கினேன்” என்று எட்டுக் கட்டையில் கத்திக் கொண்டிருந்தான். காதிலேயே வாங்காதது போல கொஞ்சம் முன்னால் சென்று அவனது ஹோண்டா ஆக்டிவாவின் சாவியை உருவி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வண்டிக்குள் வந்து உட்கார்ந்தேன்.

எங்கள் வண்டியின் சாவியை எடுக்கப் பாய்ந்தவனுக்கு ஏமாற்றம். அவன் வாகனத்தின் திறவுகோலை நான் கைப்பற்றியதைக் கண்டவுடன் ஓட்டுனன் தன் வாகனச் சாவியை எடுத்து பத்திரப்படுத்தியிருந்தான். ஸ்பீக்கர் டேஷ்போர்டு முதலியவை நனையாமல் ரெக்சின் ஷீட்டால் மூடிய ட்ரைவரிடம் கிளம்பலாம் என்பது போலத் தலையசைத்ததும் அவனது இருக்கையில் அமர்ந்தான்.

கதவை மூடியவன் சேஃப்டி லாக் போட மறந்துவிட்டேன். நடுத்தர வயது கதவைத் திறந்து என் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்தான். சாவியைக் கொடுக்கிறாயா சாவடிக்கட்டுமா என்று மீண்டும் எட்டுக் கட்டையில். “பேகம்பேட் போலிஸ் ஸ்டேஷன்க் கெள்துன்னாமு. அக்கட வச்சி தாலம் தீசுக்கோ” என்று பகர்ந்ததையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கடைசியாக அவனுடன் வந்தவனை எங்கள் வண்டியிலும் சுப்புவை அவனது வண்டியிலும் உட்கார்த்தி வைத்து ஸ்டேஷன் வரை செல்ல வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது.

சுப்பு பலியாட்டின் முக பாவத்தோடு என் முகத்தைப் பார்த்தபடியே வண்டியிலிருந்து இறங்கினான். நானாவது என் ஓட்டைத் தெலுங்கை வைத்து சமாளிக்கிறேன். சுப்பு கடலூர்காரன். தெலுங்குக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம். “அந்த ஆள் எது கேட்டாலும், தெலுகு இந்தி நஹி மாலும்னு மட்டும் சொல்லு” என்று தமிழில் சொன்னதில் சந்தேகம் அடைந்த நடுத்தரம், “ஏஞ் செப்பினாவு” என்று மீண்டும் சட்டையைப் பிடிக்க எகிறினான்.

”போகும் வழியில் அவனிடம் எதுவும் கேட்டு வைக்காதே. அவனுக்கு தெலுங்கு இந்தி எதுவும் தெரியாது” என்று சொல்லி சுப்புவை அவனுடன் அனுப்பி வைத்தேன். பேகம் பேட் ஸ்டேஷன் வாசலில் காக்கி பேண்ட்டும் சாதாரண சட்டையும் அணிந்த ஒருவரிடம் அனுப்பி வைத்தார் அங்கிருந்த செண்ட்ரி. அவர் தான் அந்த ஸ்டேஷனின் ஹெட் காண்ஸ்டபிளாம். நடுத்தரம் பேச ஆரம்பித்தது. பழி மொத்தத்தையும் ஓட்டுனன் மீது போட்டது. “ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுறவன் தானடா நீ. நீயெல்லாம் எந்த லட்சணத்துல வண்டி ஓட்டுவேன்னு எனக்கும் தெரியும். போ பேசாம” என்று ட்ரைவரிடம் கத்தினார் ஹெச்.சி. இந்த இடத்தில் நான் குறுக்கிட்டேன். “வண்டி கண்ணாடியப் பாருங்க சார். வைப்பரப் புடுங்கி ஒடைச்சிருக்காரு” என்று சொல்லிக் கொண்டிருந்த போது சுப்பு அழைத்தான். ட்ரைவரையும் என்னையும் நடுத்தரம் சட்டையைப் பிடித்து மிரட்டியதை தனது புத்தம் புதிய சோனி எரிக்சன் 3 மெகா பிக்சல் மொபைல் கேமிராவில் ரகசியமாகப் படம் பிடித்திருந்தான். சமத்துக் குட்டி. அதையும் அவரிடம் காட்டினோம்.

ஹெச்.சி. நடுத்தரத்தைத் தள்ளிக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கினார். பேரம் பேசுவதற்காக இருக்கலாம். யார் கண்டார்! சற்று நேரத்தில் திரும்பி வந்தவர், “ஏதோ தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சிருங்கன்னு சொல்றாரு. பாத்து செய்ங்க தம்பி பாவம் கஷ்டப்படுற மனுஷன்” என்று சமாதானாம் பேசினார். புரிந்துவிட்டது. அவனிடம் சில்லரை வாங்கிக் கொண்டு எங்களை வெட்டிவிடப் பார்க்கிறார் என்று.

ஓட்டுனன் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் அழுதுவிடுவான் போல இருந்தது. இருபத்தி ரெண்டு இருபத்தி மூணு வயதிருந்தால் அதிகம். “இது சரியில்லை சார், கண்ணாடியை ஒடைச்சிருக்காரு, பப்ளிக் நியூசன்ஸ், செக்‌ஷன் 75, கழுத்த நெரிச்சிருக்காரு, கொலை முயற்சி, செக்‌ஷன் 302, எல்லாத்துக்கும் மேல ட்ரங்க் அண்ட் ட்ரைவ். ஒன்னும் பிரச்சனை இல்ல, மொதல்ல ஒரு எஃப்.ஐ.ஆர். போடுங்க. எதுனாலும் கோர்ட்ல பாத்துக்குறோம். அவரை கஸ்டடில எடுங்க. எங்க கிட்ட வீடியோ எவிடென்ஸ் கூட இருக்கு” என்று சினிமா வக்கீல்கள் பேசுகிற வசனங்களை எல்லாம் அள்ளி விடவும் மீண்டும் நடுத்தரத்தை ஓரங்கட்டினார் ஹெச்.சி.

நடுத்தரத்துக்கு என்ன இதோபதேசம் நடந்ததோ தெரியாது, நடுத்தரம் புதிய கண்ணாடியும் வைப்பரும் மாற்றித் தர ஒப்புக் கொண்டார். கைவசம் பணம் இல்லாததால் தனது வண்டியை ஸ்டேஷனில் விட்டுச் செல்வதற்கும் ஒப்புக் கொண்டார். ஹெச்.சி. எங்களுடன் வந்து கார் சர்வீஸ் செண்டரில் ஜாமீன் சொன்னார். கண்ணாடியும் வைப்பரும் மாற்றப்பட்டு வண்டி இரண்டரை மணி நேரத்தில் தயாரானது.  மதியம் மூணு மணிக்கு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்த போது மணி எட்டு முப்பது.

வீட்டில் இறக்கிவிட்டவன் இரண்டு நிமிடத்துக்கு இந்தியில் எதை எதையோ சொல்லிவிட்டுப் புறப்பட்டான். என்ன எழவோ, ஒரு மண்ணும் புரியலை. எனக்கான நன்றியை மட்டும் அவனது மொழியில் என் கண்களுக்குள் எழுதிவிட்டுப் போய்விட்டான்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அன்பார்ந்த நண்பர்களே...

சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காதுங்கற மாதிரி மறுபடியும் ப்ளாக் எழுத வந்துட்டேன். சீரான கால இடைவெளில எழுதுவேன்னு என்னால உறுதி குடுக்க முடியாது. ஆனா நீங்க ரசிக்கும் படியான எழுத்துக்களோட வருவேன்னு உறுதியா சொல்லுவேன்.

நன்றி,
வி.ஜி.எஸ்