செவுட்டு அம்மாச்சி என்கிற செல்வக்கண்ணு அம்மாச்சி எங்க கொள்ளுத் தாத்தாவோட ரெண்டாவது மனைவி. எனக்கு நினைவு தெரிந்து எங்கள் உறவுகளில் நான் பார்த்த மூத்த பெண்மணி அம்மாச்சி தான். அவர்களை விட மூத்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைத்துக் கேட்க நேர்ந்ததில்லை.
பிள்ளைப் பிராயத்தில் அம்மாச்சியோடு எனக்குப் பெரிய ஒட்டுதல் ஒன்றும் கிடையாது. நான் அம்மாச்சியின் மூத்த சக்களத்தி கொள்ளுப் பேரன் என்ற போதும் என் மீது கொஞ்சம் கரிசனம் காட்டும். “யாரு அப்பானு மகனா…” என்ற படியே நெருங்கி வந்து உச்சந்தலையிலிருந்து தாவாங் கட்டை வரை ரெண்டு கையாலும் தடவி பத்து விரல்களையும் நெற்றிப் பொட்டுகளில் வைத்து அழுத்திக் கண்ணேறு கழிக்கும்.
என்னையும் என் அப்பாவையும் அம்மாச்சி பேர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. கோபால்சாமி என்பது அம்மாச்சியின் மாமனார் பெயர். அதையே என் அப்பாவுக்கும் வைத்திருந்தார் அவருடைய அப்பா (என் தாத்தா). அந்தப் பெயர் என்னுடைய பெயரிலும் ஒட்டிக் கொண்டிருந்ததால் அம்மாச்சி என் பெயரையும் சொன்னது கிடையாது.
அறுபது வயதுக்குப் பக்கமாக இருந்த போது கொள்ளுத் தாத்தா இருபதைத் தொடாத செல்வக்கண்ணு அம்மாச்சியை ரெண்டாந்தாரமாகத் திருமணம் செய்தார். தன்னுடைய மூத்த மகளைவிட சில மாதங்களே மூத்தவரான செவுட்டு அம்மாச்சியை திருமணம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு அவருக்குத் துளியும் இல்லை.
செவுட்டு மகளை எவன் தலைல கட்டுறதுன்னு காத்திருந்த அம்மாச்சியோட அப்பா கெழவனா இருந்தாலும் பரவாயில்லைன்னு கொள்ளுத் தாத்தனுக்குக் கட்டி வச்சிட்டாரு. வருஷத்துக்கு ஒன்றாக எட்டு குழந்தைகள். தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் 60க்கு மேல் வயது வித்தியாசம். ரெண்டு குடும்பத்துக்கும் கொள்ளுத் தாத்தன் பாகம் பிரிச்ச நாளில் சண்டை முத்திப் போய் மூத்தகுடியாளும், இளையகுடியாளும் அடுத்தடுத்த வீடுகளில் தனிக்குடித்தனம் போனார்கள். தாத்தனைப் பராமரிக்கிற வேலை மொத்தமும் செவுட்டம்மாச்சி தலையில் விழுந்தது.
கொள்ளுத் தாத்தனுக்கு காங்கிரஸ் கட்சி மேல அபாரப் பிரியம். அத்தனைக்கு அத்தனை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் மேல குரோதம். தேர்தல் வரும் போதெல்லாம் கிராமத்துக்குப் போய் குடியானவர்களை மூச்சுக் காத்து படாத தூரத்தில் நின்று காங்கிரசுக்கு ஓட்டுப் போடச் சொல்லி அறிவுறுத்துவார். “சரிங்க ஆண்டை… சரிங்க ஆண்டை…” என்று அவரிடம் தலையாட்டுகிற குடியானவர்கள் என் தாத்தாவிடம் சாராயத்துக்குக் காசு வாங்கிக் கொண்டு உதயசூரியனுக்குக் குத்திவிடுவார்கள்.
ஆனாலும் தேர்தலுக்குத் தேர்தல் கிராமத்துக்குப் போய் “பசுமாடு கண்ணுக்குட்டி” (காங்கிரசின் பழைய சின்னம்) சின்னத்துக்கு ஓட்டுக் கேட்பதை மட்டும் விடவில்லை. அப்படி ஒரு முறை ஓட்டுக் கேட்க கிராமத்துக்கு சைக்கிளில் கிளம்பினார் கொள்ளுத் தாத்தா. தாத்தனுக்கு ஒரு பிரச்சனை என்னன்னா சைக்கிள்ள உக்காந்த மேனிக்கு தரையில காலை ஊணி வண்டிய நிப்பாட்டத் தெரியாது. உயரம் கொஞ்சம் கம்மி.
வீட்டுக்கு முன்னாடி நட்டிருந்த சர்வே கல்லுல ஒரு காலை வைச்சி இன்னொரு காலைப் பெடல்ல வைச்சு அழுத்துனா பள்ளியக்கிரகாரம் தாண்டி கூடலூர் பிரிவு ரோடுல புகுந்து மதகுக் கட்டைல காலை வைச்சு எறங்குற வரைக்கும் நிப்பாட்ட மாட்டாரு. அன்னைக்குப் பாத்து மழை பேஞ்சு ஊரு பூராவும் சேறும் சகதியுமா கெடந்திருக்கு. கொள்ளுத் தாத்தான் மதகுக் கட்டைல காலை வைக்கவும் மச மசன்னு இருந்த மண்ணு ரோடுல சைக்கிள் சரிஞ்சு தாத்தன் கீழ விழுந்தாரு. சைக்கிள் அவரு மேல விழுந்துச்சு. ஹெர்குலஸ் சைக்கிள். பத்துப் பண்ணெண்டு கிலோ இருக்கும்.
விழுந்து அடி பட்டதுல பக்க வாதம். ஒரு கையும் காலும் இழுத்து, வாய் கோணிக்கிச்சு. நொண்டிக்கு நூறு குசும்புங்கற மட்டமான பழமொழி என் கொள்ளுத் தாத்தன் விசயத்துல மட்டும் உண்மையாப் போச்சு. போக்கு வரத்து அத்துப் போயி ஒரே எடமாக் கெடக்கவும் தாத்தனுக்குப் பொழுது போறதே பெரிய விசயமா ஆகிருச்சு. தெருவுல வெளக்கெண்ணை விக்கிறவன் ஐஸ் விக்கிறவனையெல்லாம் வீட்டைத் தாண்டிப் போன பிறகு அந்த கோணவாயாலயே சத்தமாக் கூப்பிடுவாரு. அவன் எந்த வீட்டுல கூப்பிட்டாங்கன்னு தெரியாம வீடு வீடா அலைவான்.
அம்மாச்சி வீட்டுக்கு நேர் எதிர் வீட்டுல இருக்குற சௌந்தரத்தம்மா அவுங்க பேரணத் தொட்டில்ல போட்டு பாட்டுப் பாடித் தாலாட்டுனா, இவரு “கண்டார ஓழி…”ன்னு ஆரம்பிச்சு கெட்ட கெட்ட வார்த்தையா ராகம் போட்டுப் பாடுவாரு. பேரப் புள்ளையத் தாலாட்டிக்கிட்டிருந்த சௌந்தரத்தம்மா போட்டது போட்டபடி விட்டுட்டு தாத்தனோட சண்டைக்கி வந்து நிக்கும். “கை கால் விழுந்தும் புத்தி வரலையே உனக்கு”ன்னு தாத்தனுக்கு ஈடு குடுத்து சண்டை போடும். அப்பயெல்லாம் அம்மாச்சி குறுக்க புகுந்து புருஷன விட்டுக் குடுக்காம சௌந்தரத்தம்மாவ திட்டி வெரட்டிவுடும். படுக்கைல படுத்தபடிக்கி பேண்டு வைச்சிருவாரு, ஒன்னுக்கிருந்துருவாரு. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டுத் தாத்தனுக்கு பணிவிடை பண்ணிக்கிட்டிருந்துச்சு அம்மாச்சி.
ஒரு நாள் காமராசர் எறந்துட்டாருன்னு பொட்டீல (ரேடியோ) சொல்லவும் தாத்தனுக்கு இருப்புக் கொள்ளல. “பொட்டில சொல்லிட்டா ஆச்சா! காயிதத்துல போட்டிருந்தாத் தான் நம்புவேன் என்று அடம் பிடித்து அன்னைய நியூஸ் பேப்பரை வரவழைத்து இளைய மகனைப் படிக்கச் சொல்லிக் கேட்டார். விசயம் உண்மைதான் என்ற தெரிந்த நாளிலிருந்து ஆகாரம், அன்னம் தண்ணி குறைஞ்சு போச்சு. இப்படியாக 20 நாள் கெடந்து மிராசுதார் சிங்காரம் பிள்ளை சிவலோகப் பதவியடைந்தாராம்.
கொள்ளுத் தாத்தனப் பத்தின இவ்வளவு கதையும் அம்மாச்சி சொல்லித் தான் எனக்குத் தெரியும். போன வாரம் அப்பா அகாலத்துல போன் பண்ணுனாரு. “நேத்து மத்தியானம் நம்ம செவுட்டம்மாச்சி செத்துப் போயிருச்சுடா. ராத்திரி தான் காட்டுக்கு எடுத்துட்டுப் போனோம். ஏழா நாள் கருமாதி வச்சிருக்கு. அது வரைக்கும் நீ எதுவும் கவுச்சி சாப்பிட்டுறாத” என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.
செவுட்டம்மாச்சி… இப்படி எத்தனை கதைய உனக்குள்ளையே வச்சிருந்திருப்பே? உன்னோட சேத்து எல்லாத்தையும் எரிச்சுட்டாங்களே!